Statue of Liberty - அமெரிக்க சுதந்திர தேவி சிலை பற்றிய சில தகவல்கள்!
அமெரிக்காவில் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் இயற்கையும் செயற்கையும் இணைந்துள்ள நகரம். இங்கு உள்ள வானளாவிய கட்டிடங்கள்
அறிவியலுக்கு அணிகலன்களாக உள்ளன. இந்நகரின் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவானது எழில் கொஞ்சும்
இயற்கை அழகுடன் விளங்குகிறது. இதற்கு மேலும் அழகு சேர்க்கவும், பெருமையை அளிக்கவும் இத்தீவில் வானளாவும் பிரம்மாண்டமான சிலை ஒன்று உள்ளது. இச் சிலை கி.பி. 1884ஆம் ஆண்டு பிரான்சு
அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக அளித்தது. பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ஈக்பல் எனும் கோபுரத்தை வடிவமைத்துத் தந்த குஸ்தாவ்ஈக்பெல் எனும் பொறியாளர் சுதந்திர தேவி சிலையை வடிவமைத்துத் தந்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு டெலக்ரவா ஓவியமாக வரைந்து தந்தார். இதன் அடிப்படையிலேயே பிரெடெரிக் பார்த்தோல்டி என்ற பிரான்சு நாட்டுச் சிற்பி இச்சிலையைச் செய்தார். இச்சிலையின்
உயரம் 151 அடி, பீடத்தின் உயரம் 154 அடி, ஆக மொத்த உயரம் 305 அடி. இச்சிலையின் எடை 252 டன் ஆகும். இச்சிலைக்கு இடுப்பின் சுற்றளவு 35 அடி. வாயின் அகலம் மட்டும் 3 அடி. இச்சிலை வலக்கையில் தீச்சுடர் ஏந்தி நிற்பதுபோல் உள்ளது. இதன் உயரம் மட்டும் 42 அடி ஆகும். இச்சிலையில் உள்ள கையில் இருக்கும் ஆள்காட்டி விரலின் நீளம் மட்டும் 8 அங்குலம்.
அதாவது ஏறக்குறைய ¾ அடி. என்றால் உயரம் கற்பனை செய்து பார்த்தால் சராசரி மனிதனின் உயரம் போல் சுமார் 60 மடங்காகும். இச்சிலையின் இடது
கையில் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனமும், வலது கையில் சுதந்திரத் தீச்சுடரும் உள்ளது. சுதந்திரதேவியின் பாதமானது
அடிமைத்தளை அறுக்கப்பட்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையின் தலையில் கிரீடம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு கிரணங்கள் (கதிர்கள்) உள்ளன. இவை உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு கடல்கள் பரப்பளவிலும், சுதந்திர ஒளி பரவட்டும் என்று சொல்லத்தக்க அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலைக்குக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படிக்கட்டுகள் மூலம் இச்சிலைக்குள் உச்சிவரை ஏறிச் செல்லலாம். இச்சிலை பிரான்சில் செய்யப்பட்டுத் தனிக் தனியாகப் பிரித்து 24 பெட்டிகளில் வைத்துக்
கப்பலில் கொண்டுவந்து அமைக்கப்பட்டது. இச்சிலையை அமெரிக்க ஜனாதிபதி 'குரோவர் கிளீவலாண்ட்சி' 1886-ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
இது அமெரிக்காவின் தேசிய சின்னமாக விளங்குகின்றது.
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றார்கள்.
மான்ஹாட்டன் தீவில் இருந்து லிபர்டி தீவிற்கு சென்றுவர படகுப் போக்குவரத்து உண்டு. இச்சிலை கடல்வழியாகச் செல்லும்போது மிகத் தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் கடலில் மிகப் பெரிய வீரன் வெற்றிகளிப்போடு தீச்சுடரை ஏந்தி வருவது போல் தோன்றுகின்றது.