பொடுகு இன்று பலரது மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது! அந்தப் பொடுகை நீக்க சில எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பார்ப்போம்!
1. தேங்காய்ப்பால் அரை கப், எலுமிச்சை சாறு நான்கு தேக்கரண்டி, வெந்தயம் இம் மூன்றையும் கலந்து தேய்த்து ஊறவைத்து தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.
2. கரிசலாங்கண்ணி கீரை, முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைப்பழச்சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றைக் கொண்டு பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.
3. ஒரு கப் ஆப்பிள் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து இருபது நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
4. மிளகு எண்ணெய், தயிர், செம்பருத்தி பூ இவற்றைக் கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.
5. வசம்பைத் தட்டி சிறிது நல்லெண்ணெயில் நன்றாக வறுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.
6. முல்தானி மட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக்கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
7. தலையில் தயிர் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து விட்டு பிறகு குளிக்க பொடுகுத் நீங்கும். பொடுகுத் தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள் குளிக்கும் வெந்நீரில் வேப்பிலையைப் போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.
8. வசம்புச்சாறு, பொடுதலைச் சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க
வேண்டும்.
9. பொடுதலையை, பொடுகு உள்ள தலையில் உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
10. சின்ன வெங்காயத்தை உரித்து அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
11. வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய்யை உபயோகித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
12. வெள்ளை மிளகு நான்கு தேக்கரண்டி, வெந்தயம் இரண்டு தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாதப் பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
13. தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தைப் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.
14. பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டீஷனராகவும் பயன்படும். - அழகு குறிப்புகள் - நூலிலிருந்து
